Tuesday, May 5, 2020

குணமாக்க ஆவலாய் இருக்கும் இயேசு (Jesus is willing to Heal)


"அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார்.
இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது.- மத்தேயு 8 : 2,3 -

ஏசுவால் முடியும் என்று நம்புகிறோம். ஆனால் அதைச் செய்ய அவர் ஆவலாய் இருக்கிறார், விருப்பமாயிருக்கிறார் என்று நம்புகிறோமா?

ஏசுவால் குணப்படுத்த முடியுமென்று அந்த தொழுநோயாளிக்கு சந்தேகமில்லை ஆனால் அவருக்கு விருப்பமுள்ளதா என்பதில் மட்டுமே சந்தேகம்.

ஏசு சர்வவல்லவர் என்பதை அவன் நம்பினான். ஆனால் அவர் பாசமுள்ள இதயம் உடையவர், அவன் மீது தகுதியற்ற தயவை பாராட்டுகிறவர் என்பது அவனுக்கு தெரியாது.

நாமும் தொழுநோயாளியைப் போல் ஏசுவை சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறோமா?

ஏசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு "நான் விரும்புகிறேன் உமது நோய் நீங்குக" என்றார். ஏசு குணமாக்க அதிக ஆவலாயிருக்கிறார்.

ஏசு தமது கையை நீட்டி தொழுநோயாளியை கனிவாய் தொட்டார். அவர் தொட்டது தொழுநோயை குணப்படுத்த மட்டுமல்ல, பல ஆண்டுகளாய் எல்லாராலும் ஒதுக்கிவைக்கப்பட்டு, யாரும் தொடவிரும்பாத சரீரத்தினால் மனம் நொந்து காணப்பட்ட அவனின் மனக்காயங்களை குணப்படுத்தவே அவர் பாசத்தோடு தொட்டார்.

இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.(எபிரேயர் 13:8). எதற்கெல்லாம் ஒரு விடுதலை வேண்டுமென்று நாம் அவரை நம்புகிறோமோ, அதற்கான விடுதலை தர ஏசு மிகவும் விருப்பமுடையவராக,ஆவலுள்ளவராக இருக்கிறார். நம்மீது அவர் வைத்துள்ள பாசம் அளவிடமுடியாதது. தகுதியில்லாத நம்மீது அவர் பாராட்டும் கிருபை மிகப் பெரியது. ஆகையால் அவர் பாசமுள்ள இதயம் உடையவர், நம்மீது தகுதியற்ற தயவை பாராட்டுகிறவர் என்பதை நம்பி அவரின் பாசம் மற்றும் கிருபையினால் நிரப்பப்படுவோம்! தியானிப்போம் !


Wednesday, April 29, 2020

கர்த்தர், நல்ல தகப்பன்(God is a Good Father)


"உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” - மத்தேயு 7 : 9 - 11 

  • நமது கர்த்தரை எப்படி புரிந்து கொண்டுள்ளோம்? நல்ல தகப்பனாகவும், நல்ல கடவுளாகவும் புரிந்து கொண்டுள்ளோமா?
  • மேற்குறிப்பிட்ட வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதை புரிய வைக்க ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறார்.
    பொல்லாத சிந்தையுள்ள பூமியிலுள்ள தகப்பனே தங்கள் பிள்ளைகளுக்கு நல்லதை கொடுக்க அறிந்திருக்கும்போது நம்மை நேசிக்கும் பரலோகப்பிதா மேன்மையானதை கொடுக்கமாட்டாரா?
  • நம்மிடம் காண்பிக்கும் அவரின் கனிவான இரக்கத்தையும்,பாசத்தையும் பற்றி தியானிப்போம்.
  • கர்த்தர் எனக்கு நல்ல தகப்பன் என்பதை நம் இதயத்தில் பதித்து வைப்போம்.
  • இன்று நமக்கு என்ன தேவை என்றாலும் இப்போதே அவரிடம் கேட்போம்.
  • அப்படி நாம் கேட்கும் போது அதைப் பார்த்து அவர் மகிழ்ந்து தமது நேசப்பிள்ளைக்கு சிறந்ததை தந்து ஆசீர்வதிப்பார்.